கோலாலம்பூர், டிசம்பர் -30, மலேசியாவில் ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பம் தொடர்ந்து தன்னார்வ முறையிலேயே தொடரும்.
அவ்விஷயத்தில் எந்தத் தரப்பையும் கட்டாயப்படுத்தும் சட்டங்கள் இல்லையென, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM தெளிவுப்படுத்தியுள்ளது.
மலேசிய ஹலால் சான்றிதழானது, அதன் அனைத்து தர நிர்ணயங்களுக்கும் தேவைகளுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்படத் தயாராக உள்ள தரப்புகளுக்குப் பொதுவானது.
ஹலால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கட்டிக் காக்கப்படுவதை அச்சான்றிதழ் உறுதிச் செய்வதாக JAKIM தலைமை இயக்குநர் Datuk Dr Sirajuddin Suhaimee தெரிவித்தார்.
கிளந்தானில் ஊராட்சி மன்றமொன்று, வியாபார உரிமத்தைப் புதுப்பிக்க விரும்பும் உணவு மற்றும் பானங்களை விற்கும் கடைகள் கட்டாயம் ஹலால் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டுமென விதிமுறை கொண்டு வந்திருப்பது குறித்து கேட்ட போது, அவர் அவ்வாறு சொன்னார்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தின் நடவடிக்கையை, அதன் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் ஹலால் சான்றிதழ் வைத்திருப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு முயற்சியாகவே நான் பார்க்கிறேன்;
JAKIM கூட உணவக நடத்துநர்கள் ஹலால் சான்றிதழக்கு விண்ணப்பிப்பதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
காரணம், ஹலால் சான்றிதழ் வைத்திருப்பது, பொருட்கள் மற்றும் சேவைத் தரத்தை உறுதிச் செய்வதோடு சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது.
ஆனால், வியாபாரிகள் மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க, அது குறித்த தெளிவான விரிவான விளக்கத்தை வழங்க வேண்டியது ஊராட்சி மன்றத்தின் கடமையென்றார் அவர்.
கிளந்தான் ஊராட்சி மன்றத்தின் விதிமுறை கடந்த சில நாட்களாக பொது விவாதமாகி பல்வேறு தரப்பினர் அதற்கு கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.