டெல் அவிவ், நவம்பர்-26, லெபனானின் ஹிஸ்புல்லா தரப்புடன் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
திங்கட்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, போர் நிறுத்த உடன்பாட்டை கொள்கையளவில் அங்கீகரித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், அந்த உடன்பாட்டில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து இஸ்ரேலுக்கு இன்னமும் ஐயப்பாடுகள் உள்ளன.
அது குறித்து லெபனானிய அரசுக்குத் தெரியப்படுத்தப்படுமென CNN World செய்தி வெளியிட்டுள்ளது.
ஐயப்பாடுகள் களையும் வரை, உடன்பாடு கையெழுத்தாகாது; தவிர, இஸ்ரேலிய அமைச்சரவையின் இறுதி ஒப்புதலையும் அது பெற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், மறுபக்கம் இரு தரப்புமே ஒன்றை ஒன்று தீவிரமாகத் தாக்கி வருகின்றன.
ஒரு சிறிய தவறு நடந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தைக் கெட்டு விடுமென ஐயுறப்படுகிறது.
இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்த உடன்பாடு, எட்டப்படும் நிலையிலேயே இருப்பதாக அமெரிக்காவும் முன்னதாக கூறியிருந்தது.
நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன; ஆனால் அமைதியை ஏற்பதும் நிராகரிப்பதும் அவ்விருத் தரப்புகளின் முடிவே என அமெரிக்கா தெளிவுப்படுத்தியிருந்தது.