ஷா அலாம், ஜன 22 – ஷா அலாம் ,ஹைக்கோம் தமிழ்ப் பள்ளிக்கு தனது சொந்த நன்கொடையாக 50,000 ரிங்கிட் வழங்கப்பட்டதாக கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார். தனது சொந்த முயற்சியில் நண்பர்களின் ஆதரவோடு திரட்டப்பட்ட நிதியின் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தொகை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே ஹைக்கோம் தமிழ்ப் பள்ளிக்கு வழங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார். அண்மையில் ஹைக்கோம் தமிழ்ப் பள்ளியில் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கையில் சிறந்து விளங்கிய மாணவர்களை சிறப்பித்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பிரகாஷ் இத்தகவலை வெளியிட்டார். ஹைக்கோம் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் வி.ஜே நந்தா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவி திருமதி மேகா , கோத்தா கமுனிங் சட்டமன்ற தொகுதியில் தாமான் அலாம் மேகா கிராமத் தலைவர் கோபி மற்றும் மாணவர்களும் திரளாக கலந்துகொண்டனர். இதனிடையே தனது தொகுதியில் உள்ள சீபில்ட் தமிழ்ப்பள்ளி மற்றும் எமரல்ட் தமிழ்ப்பள்ளிக்கும் தனது சொந்த முயற்சியாக நிதி திரட்டும் நடவடிக்கைகைளில் ஈடுபட்டு வருவதாக பிரகாஷ் கூறினார்.