
போர்டிக்சன், ஜனவரி-22 – நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் குழந்தைப் பிறந்ததையும் இறந்ததையும் மறைத்த சந்தேகத்தின் பேரில், ஒரு காதல் ஜோடி கைதாகியுள்ளது.
உள்ளூரைச் சேர்ந்த பெண் நோயாளி குழந்தைப் பிரசவித்துள்ளார், ஆனால் குழந்தை எங்கே எனக் கேட்டால் பதில் வரவில்லை எனக் கூறி, போர்டிக்சன் மருத்துவமனையிலிருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், தெலுக் கெமாங்கில் உள்ள ஒரு வீட்டில் பையில் மறைத்து வைக்கப்பட்ட சிசுவின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
மேற்கொண்டு பரிசோதித்ததில் குழந்தையின் நெஞ்சுப் பகுதியில் கூர்மையான ஆயுதம் பட்டது போன்ற காயம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த 18 வயது பெண்ணும், 21 வயது காதலனும் வெவ்வேறு இடங்களில் கைதாகினர்.
குழந்தைப் பிறந்தது வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்னையாகி விடுமே என்ற பயத்தில் இருவரும் அவ்வாறு செய்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, போர்டிக்சன் போலீஸ் கூறியது.
இருவரையும் விசாரணைக்குத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவிருக்கிறது.