
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – நேற்று ஸ்ரீ பெட்டாலிங்கில் சட்டவிரோதமாக பல் மற்றும் அழகியல் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த அழகு நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 27 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதாரத் துறையின் பல் சுகாதாரப் பிரிவினர் (CKAPS) காவல்துறையினருடன் இணைந்து நடத்திய இந்நடவடிக்கையின் போது, அந்த அழகு நிலையத்தில் இரண்டு வாடிக்கையாளர்கள் சிகிச்சை பெற்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் வெனீரிங் (veneer), போடாக்ஸ் (botox) உள்ளிட்ட சேவைகளை 4,000 ரிங்கிட் முதல் 12,000 ரிங்கிட் வரை விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய சிகிச்சைகளை பதிவு செய்யப்பட்ட பல் மருத்துவர்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே வழங்க வேண்டும்
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் மற்றும் பல் மருத்துவச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள், தகுதியும் அங்கீகாரமும் பெற்ற மருத்துவர்கள் மூலமே சிகிச்சை பெற வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.