கோலாலம்பூர், செப்டம்பர் 6 – 1.1 விழுக்காடு மட்டுமே உள்ள மலேசிய இந்தியர்களின் பொருளாதார பங்குடைமை உயர்த்தப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
கல்வி, வணிகம் மற்றும் உயர் வருமானம் ஈட்டும் தொழில் வாய்ப்புகள் வழி அதனை எப்படி இதனை உயர்த்துவது எனும் நோக்கத்துடன், நேற்று கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா இந்திய வரத்தக சம்மேளனத்தின் 14ஆவது ஆண்டு கூட்டம் நடைபெற்றது.
TVET கல்வி நமது இந்தியர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கியம் அம்சம் என சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் விவரித்தார். அதேசமயத்தில் நமது பொருளாதார வளர்ச்சிக்கான அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கான திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மலேசியாவில், 1.1 விழுக்காட்டில் இருக்கும் மலேசியர்களின் பங்குடைமை, அரசாங்கத்தின் உதவியுடன் 3 விழுக்காட்டிற்கு உயர்த்த முடியும் என மலேசிய இந்திய வரத்தகச் சங்க சம்மேளமான MAICCI-யின் தலைவர் டத்தோ கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
மலேசியாவில் 7 விழுக்காடு மக்கள் தொகையில் இருக்கும் இந்தியர்களின் பொருளாதார சக்தியை மேம்படுத்த அரசாங்கமும், துணையமைச்சர் டத்தோ ரமணனின் வாயிலாக பல உதவிகளை வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த உதவிகளை முறையாகப் பயன்படுத்தி அனைத்து இந்திய வர்த்தகர்களும் ஒன்றிணைந்து மலேசிய இந்தியர்களின் பொருளாதாரச் ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்று அவர், கேட்டுகொண்டார்.
பொருளாதாரத்தை வளம் பெற செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஒற்றுமை மிக அவசியம் என ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் வாரிய உறுப்பினரான டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி கூறினார்.
அதற்கு, இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும் இந்திய வர்த்தக சம்மேளனத்தில், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்கள் உறுப்பினர்களாக இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா இந்திய வரத்தக சம்மேளனத்தின் தலைவர் இளங்குமரன் தலைமையில் நடந்த 14ஆவது ஆண்டு கூட்டத்தில் டத்தோ Baldev Singh Kailay போட்டியின்றி புதிய தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.