
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 – 2030 ஆம் ஆண்டிற்குள் கிள்ளான் பள்ளத்தாக்கின் மக்கள் தொகை 10 மில்லியனை நெருங்கும் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் , பொது சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை கவலையளிக்கிறது.
இந்த மக்கள் தொகை அதிகரிப்பில் அரசாங்கத்தின் கூடுதல் கவனம் தேவை என்று மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UTM) மூத்த விரிவுரையாளர் இணைப் பேராசிரியர் டாக்டர் முஹம்மது நஜிப் ரசாலி கூறியுள்ளார்.
அதே நேரத்தில் DBKL பொது வசதிகள் திட்டமிடுதலை விரைவாக செயல்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து கட்டுப்படுத்தப்படாத குடியிருப்பு வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல், போதுமான வடிகால் இல்லாதது மற்றும் திடீர் வெள்ள அபாயம் போன்ற உள்கட்டமைப்பு சிக்கல்களை அதிகரிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
ஆக மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ப மருத்துவமனைகள், பள்ளிகள், தீயணைப்பு நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பிற அடிப்படை வசதிகளும் அமைந்திடல் அவசியம்.
ஆதலால் மேம்பாட்டு ஒப்புதல்களை வழங்குவதற்கு முன் சமூகத் தேவைகளை மதிப்பீடு செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.