Latestமலேசியா

12 நாடுகள், 40 கோவில்கள்: 2026 தைப்பூச நேரலையில் வணக்கம் மலேசியா உலகளாவிய சாதனை

கோலாலாம்பூர், பிப்ரவரி-3-2026 தைப்பூசத்தை ஒட்டி உலகளவில் விரிவான நேரலையை வழங்கி மலேசியாவின் முன்னணி தமிழ் டிஜிட்டல் ஊடகத் தளம் என்ற தனது நிலையை வணக்கம் மலேசியா மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில், 12 நாடுகளில் 40 கோவில்களிலிருந்து வணக்கம் மலேசியா நேரடியாக தைப்பூசக் கொண்டாட்டம் தொடர்பான செய்திகளையும் காட்சிகளையும் வழங்கியது.

அந்த 12 நாடுகள் முறையே, மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மியன்மார், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், நைஜீரியா ஆகியவையாகும்.

இதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள தமிழ் – இந்து பக்தர்களை தைப்பூசத்தில் ஒரே டிஜிட்டல் பாலத்தில் வணக்கம் மலேசியா இணைத்தது.

மின்னியல் ஊடகமாக இருந்தாலும், தைப்பூசக் கொண்டாட்டங்களை கடல் கடந்தும் மக்களின் கண்முன்னே கொண்டு வந்த இம்முயற்சி நேயர்களின் பாராட்டுதலைப் பெற்றது.

வணக்கம் மலேசியாவின் டிஜிட்டல் விரிவு இன்று 1.5 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டியுள்ளது; மாதத்திற்கு 100 மில்லியன் பார்வைகள் பதிவாகின்றன.

இதுவே, தைப்பூசக் காலத்தில், குடும்பங்கள், மூத்தோர் மற்றும் வெளிநாட்டு தமிழர்கள் தங்கள் சமய மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்திருக்க பெரிதும் உதவியது.

வணக்கம் மலேசியாவின் இந்த பெருமைமிகு அடைவுநிலை குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த அதன் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி “இது வெறும் எண்கள் அல்லது பார்வைகள் பற்றியது அல்ல; மாறாக சேவை பற்றியது” என்றார்.

2 நாட்களும் நேரலை வெற்றியடைய அயராது உழைத்த வணக்கம் மலேசியா பணியாளர்களுக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.

“உலகத் தமிழர்களை ஆன்மீக வேர்களுடன் இணைக்கும் டிஜிட்டல் பாலமாக இருப்பதில் வணக்கம் மலேசியா பெருமை கொள்கிறது” என்றார் அவர்.

இச்சாதனை, தொழில்நுட்பம், நம்பிக்கை மற்றும் கலாச்சார பொறுப்பு ஆகியவற்றை இணைத்து, தமிழ் சமூகத்திற்கு நீண்டகால சேவை செய்யும் வணக்கம் மலேசியாவின் கடப்பாட்டை பறைசாற்றுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!