
சிபு, ஜூலை-26 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட ஏதுவாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு 21 பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலான அப்பரிந்துரைகள் பொருளாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஏரன் அகோ டகாங் (Aaron Ago Dagang) அதனைத் தெரிவித்தார்.
நீடித்த நிலையான தேசிய ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும், மக்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் இந்த தேசக் கட்டுமானம் முக்கியம் என்றார் அவர்.
அவ்விலக்கை நோக்கி ஒரு விரிவான கட்டமைப்பையும் அமைச்சு உருவாக்கி வருகிறது.
சரவாக், சிபுவில் மாநில அளவிலான 2025 ஒருமைப்பாட்டு வாரக் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
நேற்று தொடங்கி 3-நாள் விழாவாக நடைபெறும் அந்நிகழ்வில், மக்கள் விளையாட்டு, உடற்பயிற்சி, நாட்டுப் பற்று திரைப்படங்கள் ஒளிபரப்பு, அரசுத் துறைகளின் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறன.
13-ஆவது மலேசியத் திட்டம் வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.