
கோலாலாம்பூர், ஜூலை-23,
இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுடன், ஒற்றுமை அரசாங்க ஆதரவு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியச் சந்திப்பொன்றை நடத்தினர்.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜு, செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமான், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியச் சமூக மேம்பாடு மற்றும் நலன் பாதுகாப்புக் குறித்து அச்சந்திப்பில் விவாதித்ததாக மித்ரா தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி தெரிவித்தார்.
இந்தியச் சமூகத்தை வலுப்படுத்த தேவைப்படும் வியூகம் மற்றும் அதன் இலக்கை வரைவது குறித்த அம்சங்களுக்கு இச்சந்திப்பு முக்கியத்துவம் வழங்கியது.
மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான ஓர் ஆக்கப்பூர்வ முன்னெடுப்பை பிரபாகரன் கணபதி அச்சந்திப்பில் முன்வைத்தார். அதுவோர் விரிவான பரிந்துரை அறிக்கையாகும்.
இந்தியச் சமூகத்தின் குரல்களுக்கும் அபிலாஷைகளுக்கும், தேசிய கொள்கை வரையில் தொடர்ந்து இடம் கிடைப்பதை உறுதிச் செய்ய இதுபோன்ற சந்திப்புகள் அவசியமென, மித்ரா தலைவர் பி.பிரபாகரன் அறிக்கையொன்றில் கூறினார்.
இத்தகையக் கூட்டு கடப்பாடுகள், நீண்ட கால தீர்வுகளுக்கும் ஆக்கப்பூர்வமான திட்ட அமுலாக்கங்களுக்கும் ஓர் உந்துதலாக இருக்குமென, பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.