கோலாலம்பூர், செப்டம்பர் 13 – தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் துறைகளில், தீயணைப்பு மீட்புத் துறையும் ஒன்றாகும்.
இத்துறையைச் சாமானியரும் தேர்ந்தெடுக்கலாம் என்று உந்துசக்தியை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு ‘வீரா I’ என்ற குறும்படம் வெளியீடு கண்டு பலரின் மனதையும் கவர்ந்திருந்தது.
தமிழில் வெளியிடு கண்ட அக்குறும்படத்தைத் தொடர்ந்து, தற்போது பெண்களும் தீயணைப்பு மீட்புத் துறையில் சாதிக்க முடியும் என்பதை பறைசாற்ற ‘வீரா II’ என்று குறும்படம் ஒன்றும் இம்மாதம் வெளியீடு காணவுள்ளது.
மலாய் மொழியில் உருவாக்கம் கண்ட அக்குறும்படத்தைக் குறித்து இவ்வாறு விவரிக்கிறார் கெடா தீயணைப்பு மீட்புத் துறையின் துணை அமலாக்க அதிகாரியும், இக்குறும்படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான ஹேமநாதன்.
3 நாட்களில் எடுக்கப்பட்ட இப்படத்தில் 99 விழுக்காட்டினர், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள்தான் நடித்திருப்பதாக
இதில் சிறப்பம்சமாக பேராக் மாநில தீயணைப்பு மீட்புத் துறையின் இயக்குநரும் நடித்துள்ளதாக கூறுகிறார் இவர்.
அதோடு இக்குறும்ப்படம் தனது சுய முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் இதற்கு மலேசிய தீயணைப்புத் துறையின் அனுமதியும் ஆதரவும் இருப்பதாக வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார் ஹேமநாதன்.
இத்துறையில் பெண்களின் உண்மையான சாதனையை தன்னால் முடிந்தவரைச் சிறப்பான முறையில் கதை வடிவமாகக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள இவர்,
இக்குறும்படம் எதிர்வரும் செப்டம்பர் 16-ஆம் திகதி மாலை 6 மணிக்கு, யூடியூபில் வெளியாகும் எனவும் பகிர்ந்து கொண்டார்.
தீயணைப்பு வீராங்கனைகள் சந்திக்கும் சவால்களும், அவர்களின் போராட்டங்களுக்கு பின் கிடைக்கும் வெற்றிகளும் உணர்வுப்பூர்வமாகக் குறும்படமாக வெளியாகவிருப்பதை, அனைவரும் பார்த்து மகிழுமாறு தீயணைப்பு வீரருமான ஹேமநாதன் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், இப்படத்தில் நடித்த வீரர்களுக்கு மட்டுமின்றி படம் எடுத்தல், தொகுத்தல் என தனக்குப் பக்கபலமாக இருந்த அவரது நண்பர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.