
ஷா ஆலாம், பிப்ரவரி-24 – 16-ஆவது மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷாவுக்குப் எதிராக நிந்தனைக்குரிய வகையில் பேசியக் குற்றச்சாட்டிலிருந்து, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கைத் தொடருவதில்லையென அரசு தரப்பு முடிவு செய்த காரணத்தால், ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் சனுசியை விடுதலைச் செய்தது.
சனுசியை வழக்கிலிருந்து விடுவிக்காமல் குற்றச்சாட்டிலிருந்து மட்டும் விடுவிக்கலாம் என்று தான் அரசு தரப்பு முதலில் நீதிமன்றத்திடம் பரிந்துரைத்திருந்தது.
எனினும், வழக்கைத் தொடர விரும்பவில்லை என அரசு தரப்பு முடிவுச் செய்து விட்டதால், சனுசியை முழுமையாக விடுவிக்க வேண்டும் என எதிர்தரப்பு வாதமிட்டது.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுடின், சனுசியை வழக்கிலிருந்தும் குற்றச்சாட்டிலிருந்தும் முழுவமையாக விடுவித்தார்.
2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோம்பாக்கில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிலாங்கூர் மந்திரி பெசார் நியமனம் மற்றும் மத்தியில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது தொடர்பில் சனுசி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இந்நிலையில், சிலாங்கூர் மந்திரி பெசார் நியமனம் தொடர்பில் மாநில சுல்தான், சுல்தான் ஷாரஃபுடின் இட்ரிஸ் ஷாவுக்கு எதிராக நிந்தனைக்குரிய வகையில் பேசிய வழக்கில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி இதே ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் சனுசியை விடுதலைச் செய்தது.