கோலாலம்பூர், அக் 28 – மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம்
மேற்கொண்ட துரித முயற்சியின் பயனாக அச்சங்கத்தின் உறுப்பினர்களில் 16 பேருக்கு பெர்னாமாவின் காசே திட்டத்தின் கீழ் Tabung kasih @ HAWANA திட்டத்தின் நியுதவியை தொடர்புத்துறை அமைச்சர் பாமி பட்சில் ( Fahmi Fadzil) அங்கீகரித்தார். ஊடக பணியாளர்களின் சமூக நலனுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சியாக தமிழ் மலரின் முன்னாள் நிருபர் இராம சரஸ்வதி ராமசாமி மற்றும் தமிழ் நேசனின் பிழை திருத்தும் பணியாளர் பத்துமலை சிலம்பரம் ஆகியோரின் இல்லத்திற்கு நேரடியாக வருகை புரிந்து காசே அவனா நிதியுதவியை பாமி இன்று வழங்கினார். தீபாவளி பெருநாளுக்கு தயாராகும் பொருட்டு அவர்களுக்கான இந்த உதவி பெரும் துணையாக இருக்கும் என பாமி தெரிவித்தார்.
தமிழ் மலரில் 21 ஆண்டு காலம் பணியாற்றிய 51 வயதான சரஸ்வதி கடந்த 2022 ஆம் ஆண்டு பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டார். தமிழ் நேசனில் 46 ஆண்டு காலம் பணியாற்றிய 72 வயதுடைய பத்துமலை நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். மலேசிய நண்பன் பணியாளர் லோகநாதனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் நிதியுதவியை வழங்கியிருந்தார்.
உடல் நலம் குறைந்த மொத்தம் 16 பேரின் பெயர்களை மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் காசே நிதியுதவி திட்டத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் தற்போது 3 பேருக்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்ட வேளையில் எஞ்சிய 13 பேருக்கு வங்கி மூலமாக விரைந்து
நிதியுதவி சேர்க்கப்படும் என்று பாமி தெரிவித்தார். இந்த நிகழ்வில் பெர்னாமாவின் தலைமை செயல் அதிகாரி புவான் நுர் உல் அபிடா கமாலுடின் ( Nur ul Afida Kamaludin ) , தொடர்பு அமைச்சின் அதிகாரி டத்தோ சிவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே முத்தமிழ் மன்னன் தலைமையிலான செயலவை உறுப்பினர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு அமைச்சர் பாமி பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். இதனிடையே மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்த அமைச்சின் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன் மற்றும் புவான் நூருல் ஆகியோருக்கும் முத்தமிழ் மன்னன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.