
கோலாலம்பூர், பிப்ரவரி-18 – கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL, மாநகரைச் சுற்றி 10 முதல் 17 மாடிகள் கொண்ட இரண்டு தொகுதி கட்டிடங்களை அமைத்து, செங்குத்தாகப் பள்ளிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
கோலாலம்பூரில் ஏற்பட்டுள்ள நிலப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா கூறினார்.
பல வளர்ந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அத்திட்டத்தை, செயல்படுத்துவது குறித்து கல்வி அமைச்சுடன் விவாதிக்கப்படும் என்றார் அவர்.
மைதானம் மற்றும் கட்டுமானத் தொகுதிகளை உள்ளடக்கி 10 முதல் 17 மாடிகளுக்குள் 2 கட்டடங்களை எழுப்பும் இம்மாதிரியான கட்டுமானம் ஆஸ்திரேலியாவில் பரவலாகச் செயல்படுத்தப்படுகிறது.
இந்த செங்குத்து வடிவிலான பள்ளிகள், கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் முக்கியக் கூறுகளை தியாகம் செய்யாமலும், கூரை மீதுள்ள இடத்தை நன்கு பயன்படுத்தும் வகையிலும் கட்டுப்படுகின்றன.
கோலாலம்பூரில் நிலப் பற்றாக்குறை நிலவுவதால் பள்ளிகள் மற்றும் மண்டபங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமானம் குறித்து பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் கேட்ட கேள்விக்கு, Dr சாலிஹா பதிலளித்தார்.