
காஜாங், டிசம்பர் 27-1MDB வழக்கில், தீர்ப்பு தமக்கெதிராக வந்துள்ளதால் நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிதானம் காப்பதோடு, சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும், நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஒரு கடினமான பயணம் என்றாலும், நான் இன்னும் நம்பிக்கை இழந்துவிடவில்லை. சட்டப்படி நீதி கேட்டு தொடர்ந்து போராடுவேன்” என்றார் அவர்.
நஜீப்பின் அறிக்கையை, அவரின் தலைமை வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட் ஷாப்பியி அப்துல்லா நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களிடம் படித்துக் காட்டினார்.
1MDB நிதி முறைகேடு வழக்கில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி தொடர்பான 25 குற்றச்சாட்டுகளிலும் நஜீப் குற்றவாளி என புத்ராஜெயா உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
தவிர, 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனை, அவர் SRC International வழக்கில் ஏற்கனவே அனுபவித்து வரும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்ததும் 2028-ல் தொடங்கும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
1MDB விவகாரம், மலேசியா மட்டுமின்றி உலகமே கண்ட மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பல பில்லியன் ரிங்கிட் பணம் தொடர்புடைய இந்த ஏழாண்டு கால தீர்ப்பை தொடர்ந்து, பிற அரசியல் தலைவர்கள் பலரும் அமைதி மற்றும் நீதிமன்ற மரியாதையை கடைபிடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.



