
கோலாலம்பூர், நவம்பர்-8 – உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிரின் செனட்டர் பதவிக்காலம் டிசம்பர் 2-ஆம் தேதி முடிவடையவிருக்கும் நிலையில், 2 முதல் 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என அவர் கோடி காட்டியுள்ளார்.
நேற்றைய நிகழ்வொன்றில் உரையாற்றிய போது, “என் காலம் முடிவடைய உள்ளது” என அவர் கூறியதிலிருந்து, மாற்றம் நெருங்கி இருப்பது தெளிவாகிறது.
அமைச்சர்களாகப் பொறுப்பேற்க ஏதுவாக, டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், டத்தோ நாயிம் மொக்தார், மற்றும் டத்தோ ஸ்ரீ தெங்கு சாஃப்ருல் ஆகியோருடன் 2022 டிசம்பரில் சாம்ரி செனட்டராக நியமிக்கப்பட்டார்.
மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, செனட்டர் பதவிக்கான ஒரு தவணை என்பது மூன்றாண்டுகளாகும்.
ஒருவர் அதிகபட்சம் 2 தவணைகள் மட்டுமே அதாவது ஆறாண்டுகள் வரையில் தான் செனட்டராக இருக்க முடியும்.
அப்படி பார்த்தால் சாம்ரி உள்ளிட்ட மற்ற மூவரைக் காட்டிலும், தற்போது தெங்கு சாஃப்ருல் மட்டுமே தனது இரண்டாவது மற்றும் இறுதி தவணைக் காலத்தில் உள்ளார்.
அதாவது தற்போதைய செனட்டர் பதவி காலம் முடிவடைந்த கையோடு அவரின் அமைச்சர் பதவியும் காலாவதியாகும்.
இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைச்சரவை மாற்றம் குறித்து யூகங்கள் எழுந்துள்ளன.



