20 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு ஜெராம் தமிழ்ப் பள்ளிக்கு நிரந்தரத் தீர்வு; ‘தீபாவளி பரிசுக்கு’ பிரதமர் அன்வாருக்கு கோபிந்த் சிங் நன்றி

கோலாலம்பூர் , அக்டோபர்-11,
பஹாங், ஜெராம் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் 20 ஆண்டுகால சிக்கலுக்கு ஒருவழியாகத் தீர்வு கிடைத்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட 2026 வரவு செலவு திட்டத்தில், அப்பள்ளியின் புதியக் கட்டடத்துக்கு சிறப்பு மானியம் ஒதுக்கப்பட்டது ‘பிரதமரின் தீபாவளி பரிசாகும்’ என, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வருணித்தார்.
அதற்காக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றித் தெரிவித்த கோபிந்த், இது, ஜெராம் பள்ளியின் நீண்ட நாள் கனவு நனவான தருணம் என்றார்.
பல ஆண்டுகளாக கெபின் எனப்படும் கொள்கலன்களில் இயங்கிய இப்பள்ளிக்கு, ஒருவழியாக தீபாவளிக்கு முன் ஒளி பிறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்ப் பள்ளிகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன; ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்விச் சூழல் வழங்குவதே மடானி அரசாங்கத்தின் நோக்கம்.
அதனை வெறும் வாய்வார்த்தையாக அல்லாமல் செயலில் செய்து காட்டியுள்ளோம் என்றார் அவர்.
இவ்வேளையில், இந்த ‘மக்கள் பட்ஜெட்டில்’, இந்திய – சீன கிராம மேம்பாட்டுக்காக RM90 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, தீபாவளியை முன்னிட்டு, RM2 பில்லியன் மதிப்புள்ள STR ரொக்க உதவி அக்டோபர் 18ஆம் தேதி வழங்கப்படுவது, இந்தியச் சமூகத்திற்கான ரொக்க உதவி RM1 பில்லியனாக உயர்த்தப்பட்டது போன்ற அறிவிப்புகளையும் கோபிந்த் பாராட்டினார்.
தவிர, MITRA, TEKUN நேஷனல் மற்றும் Amanah Ikhtiar Malaysia வழியாக RM220 மில்லியன் நிதி ஒதுக்கீடு தொடருவதும் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.