
கோலாலம்பூர், பிப்ரவரி-18 – நாட்டில் இணையக் குற்றங்களால் கடந்தாண்டு மட்டும் 1.5 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு மொத்தமாக 35,368 சம்பவங்கள் பதிவாகின; 2023-ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 2.53 விழுக்காடு அதிகமாகுமென, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
2022-ஆம் ஆண்டில் பதிவான மொத்த இணையக் குற்றங்கள் 25,479 ஆகும்; அவற்றின் வாயிலாக 851 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
ஆக, 2022 முதல் 2024 வரை இணையக் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சைஃபுடின் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் பலர் போலீஸில் புகார் செய்வதில்லை என்பதால், உண்மை எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்குமென்றார் அவர்.
இணையக் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் குறித்த புள்ளி விவரங்களை வழங்குமாறு, பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.
அதிகரித்து வரும் அனைத்துலக மோசடி கும்பல்களின் அட்டகாசம் குறித்தும், அதனை ஒடுக்குவதற்கான கடுமையான சட்ட அமுலாக்கம் குறித்தும் சிவகுமார் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சைஃபுடின், மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள், தொலைப்பேசி எண்கள் போன்றவற்றை சரிபார்க்க, அரசாங்கம் Semak Mule 2.0 என்ற இணைய அகப்பக்கத்தைத் திறந்திருப்பதாகச் சொன்னார்.
அதோடு, அனைத்துலக போலீஸான INTERPOL, அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையான FBI போன்றவற்றுடனும் மலேசியப் போலீஸ் ஒத்துழைத்து வருகிறது.
பல்வேறு நாடுகளுடன் எல்லை கடந்த குற்றச்செயல் ஒழிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன என்றார் அவர்.