
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – கடந்தாண்டு NPI எனப்படும் சிறப்பு வாகனப் பதிவு எண் பட்டை விற்பனையின் மூலம் அரசாங்கம் 45.9 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியது.
அதன் ஒரு பகுதி, உதவித் தேவைப்படும் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
அந்த NPI ஏல விற்பனை GOLD, FFF, EV, PETRA, MADANI ஆகிய சிறப்புப் பதிவு எண் பட்டை வரிசைகளை உட்படுத்தியது என்றார் அவர்.
கூட்டரசு பிரதேச பொன்விழாவை ஒட்டி கடந்தாண்டு விற்பனைக்கு வந்த GOLD 1 பதிவு எண் பட்டையை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் 1.5 மில்லியன் ரிங்கிட் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த NPI விற்பனையில் வசூலாத தொகையின் ஒரு பகுதி, நிதி அமைச்சின் கீழுள்ள ஒருங்கிணைந்த நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் 50 விழுக்காடு நிதி போக்குவரத்து அமைச்சிடம் சேர்க்கப்பட்டது;
2024 பட்ஜெட்டில் பிரதமர் அறிவித்தது போல் வசதி குறைந்த மக்களுக்கான பல்வேறு நலத் திட்ட உதவிகளுக்கு அது பயன்படுத்தப்படுவதாக அந்தோனி சொன்னார்.
வாகனமோட்டும் உரிமம் பெறுவதற்கான MyLesen கட்டணத்தை ஏற்றுக் கொள்வது, இலவச ஹெல்மட் விநியோகம், உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு மானிய விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவது உள்ளிட்டவை அத்திட்டங்களாகும்.