
பாரிஸ், டிச 18 – 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்து
போட்டியில் வெற்றிபெறும் குழு 50 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 204 மில்லியன் ரிங்கிட்டை பரிசாக பெறும் என அனைத்துலக காற்பந்து சம்மேளனமான FIFA அறிவித்துள்ளது.
உலகக் கிண்ண காற்பந்து போட்டி வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெறும் குழு அதிக அளவிலான பரிசுத் தொகையை பெறவிருக்கிறது.
இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 655 மில்லியன் டாலர் கிட்டத்தட்ட 2.670 பில்லியன் ரிங்கிட் என்பது, 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடந்த போட்டியில் அணிகளுக்கு விநியோகிக்கப்பட்ட 440 மில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது இது 50 விழுக்காடு அதிகமாகும்.
அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம்தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதிவரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் இப்போட்டியில் முதல் முறையாக 48 அணிகள் கலந்துகொள்கின்றன.
இதற்கு முன் கலந்துகொண்ட 32 அணிகளைவிட இது 50 விழுக்காடு அதிகமாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் பிரான்சுக்கு எதிராக லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பெனால்டி மூலம் வெற்றிபெற்றபோது அர்ஜென்டினா கால்பந்து சங்கம் 42 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 171.36 மில்லியன் ரிங்கிட்டை பெற்றது.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதற்காக பிரான்ஸ் அணிக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 122.4 மில்லியன் ரிங்கிட் பரிசு வழங்கப்பட்டது. இந்த முறை, இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 33 மில்லியன் அமெரிக்க டாலரும் , மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலரும் வழங்கப்படும்.



