
ஜெனிவா, ஜூலை-9 – 2027-2030 தவணைக்கான ITU எனப்படும் அனைத்துலத் தொலைத்தொடர்பு மன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தனது வேட்புமனுவை, மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் இன்று நடைபெற்ற தகவலறிந்த சமூகத்திற்கான WSIS+20 மாநாட்டில், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அவ்வறிவிப்பை வெளியிட்டார்.
Partner2Connect உறுதிமொழிகளில் அதன் ஈடுபாடு, ITU ஆய்வுக் குழுக்களுக்குத் தலைமை தாங்குதல் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட, ITU-வில் தொடர்ச்சியான பங்கேற்பை முன்வைத்து மலேசியா மீண்டும் போட்டியிடுவதாக ஃபாஹ்மி கூறினார்.
“ எங்கள் குறிக்கோள் தெளிவாக உள்ளது: மிகவும் இணைக்கப்பட்ட, தகவலறிந்த மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய சமூகத்தை உருவாக்க நாங்களும் உதவ விரும்புகிறோம்” என்றார் அவர்.
டிஜிட்டல் உள்ளடக்கத்தை அளவிடுவதற்கும், சவால்களை தாங்கும் சக்தியை வலுப்படுத்துவதற்கும், இந்த டிஜிட்டல் யுகத்தில் யாரும் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கும், அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கான மலேசியாவின் முழு கடப்பாட்டையும் ஃபாஹ்மி உறுதிச் செய்தார்.
மலேசியா தற்போது 2023-2026 தவணைக்கான ITU மன்ற உறுப்பினராக உள்ளது;
இதன் மூலம், ITU-வின் வியூகக் கொள்கை திசையை வடிவமைப்பதில் பங்களிக்கவும், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஆசிய வட்டாரத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் மலேசியா வாய்ப்புப் பெற்றுள்ளது.
நேற்று தொடங்கி ஜூலை 11 வரை நடைபெறவிருக்கும் இந்த WSIS+20 உச்ச நிலை மாநாட்டில், மலேசியப் பேராளர் குழுவுக்கு, டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தலைமையேற்றுச் சென்றுள்ளார்.