
கோலாலம்பூர், ஜனவரி-12-3 வயது சிறுவனின் பிறந்தநாள் ஆசையை போலீஸ் அதிகாரிகள் நிறைவேற்றிய மனதை வருடும் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘ஓம்’ என்ற அச்சிறுவன் இச்சிறு வயதிலேயே போலீஸ் அதிகாரிகளை மிகவும் விரும்புபவன்.
போலீஸ் கார் உட்பட போலீஸ் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அவனுக்குக் கொள்ளைப் பிரியம்.
அதை உணர்ந்த அவனது அத்தை, ‘ஓம்’மின் பிறந்தநாளுக்கு ஒரு வித்தியாசமான ஏற்பாட்டைச் செய்தார்.
அதாவது, அம்பாங் ஜெயா போலீஸ் நிலையத்திற்கு அவசர அழைப்புச் செய்து, ஒரு குழந்தையின் சிறிய ஆசையை நிறைவேற்றித் தருமாறு ஒரு சிறப்பு வேண்டுகோளை வைத்தார்.
அந்த வேண்டுகோளுக்கு மனமுவந்து, Amsyar, Abdullah ஆகிய இரு போலீஸ்காரர்கள் வீட்டுக்கே வந்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர்.
மின்மினக்கும் விளக்குகளுடன் வந்த ரோந்து கார், சிறுவனுக்கு மறக்கமுடியாத தருணத்தை தந்தது.
போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்கி வைத்துக் கொள்ள, ‘ஓம்’ போலீஸ் தொப்பி அணிந்து, அதிகாரிகளுடன் மகிழ்ச்சியாக பேசும் வீடியோ @subalakkshmi_ என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பலர் இந்த பாசத்திற்கும் மனிதநேயத்திற்கும் போலீஸ் அதிகாரிகளை பாராட்டி வருகின்றனர்.
சிறிய செயல்… ஆனால் பெரிய மகிழ்ச்சியை உருவாக்கியுள்ள இவ்வீடியோ 400,000 பார்வைகளை கடந்து தொடர்ந்து வைரலாகி வருகிறது.



