கோலாலம்பூர், செப்டம்பர் -7 – உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், PIO புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளி பெருவிழா நடைபெறவிருக்கிறது.
3 நாள் விழாவாக செப்டம்பர் 14 தொடங்கி 16 வரை கோலாலம்பூர் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மற்றும் அதன் ஆசிரமத்தில் அப்பெருவிழா நடைபெறுவதாக, ஏற்பாட்டுக் குழு கூறியது.
விழாவின் அடிப்படை நோக்கமே, கலை கலாச்சாரம், சரித்திரம் மற்றும் நம் முன்னோர்கள் எதிர்நோக்கிய சவால்கள், அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை நினைவுக் கூர்ந்து கௌரவிப்பதாகும் என, கோபியோ மலேசிய இந்திய வம்சாளி அமைப்பின் செயலாளர் சசிதரன் தெரிவித்தார்.
இம்முறை கலை, கலாச்சார,வர்த்தக கண்காட்சிகளுடன் 6 சிறப்பு மாநாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, புற்றுநோய் பரிசோதனை, இலவச சட்ட ஆலோசனை, சிறுவர்களுக்கான விளையாட்டுகள் என மொத்தம் 23 அங்கங்களும் வருகையாளர்களுக்காக காத்திருக்கின்றன.
PIO அனைத்துலக மூத்த ஒருங்கிணைப்பாளர் கணேசன் அவ்விவரங்களைத் தெரிவித்தார்.
தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், சீக்கியர்கள், மாராட்டியர்கள் தொடங்கி மலாக்கா செட்டி சமூகத்தினர் வரை பங்கேற்கவுள்ள இப்பெரு விழாவில் மலேசிய இந்திய வம்சாவளியினரும் திரளாக வந்து பங்கேற்க வேண்டுமென, மலேசிய இந்திய வம்சாவளி அமைப்பின் தலைவர் S.குணசேகரன் கேட்டுக் கொண்டார்.