
ஜோர்ஜ் டவுன், ஜூலை 23 – பினாங்கில் உள்ள மூன்று பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 800க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டன .
இறைச்சிக் கூடங்களில் கிருமியின் தடயங்கள் கண்டறியப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பன்றிகள் மூன்று மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு ஊராட்சி மன்றங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர் H’ng Mooi Lye கூறினார்.
இதுவரை மூன்று பண்ணைகளில் மட்டுமே ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பதோடு , பாதிக்கப்பட்ட இரண்டு பண்ணைகளில் 822 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது பண்ணையின் முடிவுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து பன்றிகளை கொண்டு செல்வதை நாங்கள் தடை செய்துள்ளோம். ஆரோக்கியமான பன்றிகளிலிருந்து வரும் பன்றி இறைச்சி உண்பதற்கு பாதுகாப்பானது என்றும், வைரஸ் கிருமி மனிதர்களுக்கு பரவாது என்றும் அவர் கூறினார்.
பண்ணைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
கம்போங் செலமாட்டில் உள்ள இரண்டு பண்ணைகள் இதுவரை 50 பன்றி இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக ஜூலை 13ஆம் தேதி பினாங்கு கால்நடைத்துறையின் இயக்குநர் டாக்டர் சைரா பானு ரெஜாப் ( Saira Banu Rejab ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.