
கோலாலம்பூர், அக் 28 –
புடி95 எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.
மேலும் வதந்தியைப் பரப்பும் வைரலான சமூக ஊடகச் செய்திகள் பொய்யானது என்பதால் அதனை அரசாங்கம் நிராகரித்துள்ளது. புடி95 இன் அளவை மாற்ற அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்றும், மாதாந்திர ஒதுக்கீட்டையோ அல்லது மானிய விலையையோ திருத்துவது குறித்து அரசாங்கம் எதனையும் தெரிவிக்கவில்லையென கருவூல தலைமைச் செயலாளர் ஜோஹன் மாமுட் மெரிக்கன் ( Johan Mahmood Merican ) கூறினார்.
அண்மையில் , புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கிடப்பட்ட எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக அரசாங்கமோ அல்லது தாமோ தெரிவிக்கவில்லையென ஜோஹன் தெரிவித்தார்.
மலேசியர்களின் உண்மையான தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் நோக்கில் 300 லிட்டர் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. புள்ளிவிவரப்படி, அரசாங்கம் தகுதி வரம்பை அடையாளம் காண முயற்சித்தபோது, சராசரி நுகர்வு மாதத்திற்கு சுமார் 80 லிட்டர் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டது.
ஆனால், வரம்பை 80 லிட்டராக வைத்தால், அது சராசரியாக இருப்பதால், பாதி மக்களை மட்டுமே எட்ட முடியும் . 180 லிட்டரில், 99 விழுக்காடு நிரப்படுகிறது. இதுவே 300 லிட்டராக இருக்கும்போது 99.3 விழுக்காடு உள்ளடக்குவதாக ஜோஹன் சுட்டிக்காட்டினார்.



