
ஜெராண்டூட், மார்ச்-12 – மக்களிடையே பதற்றம் அதிகரிக்கும் அளவுக்கு 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை உட்படுத்திய விவகாரங்களில் தலைவர்கள் கோமாளித்தனமாக நடந்துகொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பஹாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா அவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
தலைவர்கள், குறிப்பாக அரசியல்வாதிகள் மக்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாக விளங்க வேண்டும்.
அதை விடுத்து, காலங்காலமாக நாம் கட்டிக் காத்து வரும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைத் தூண்டி விடக் கூடாது என்றார் அவர்.
பேச்சிலும் நடவடிக்கையிலும் அறிவையும் மனதையும் பயன்படுத்துங்கள்; வெறுப்புணர்வைத் தூண்டாதீர்கள்.
மலேசியர்களிடையே நிலவும் நல்லிணக்கமானது, பரஸ்பர மரியாதை மற்றும் விட்டுக் கொடுக்கும் போக்கால் கிடைத்ததாகும் என்பதை முஸ்லீம்களும் முஸ்லீம் அல்லாதோரும் நினைவில் கொள்ள வேண்டுமென அல் சுல்தான் அப்துல்லா கூறினார்.
எனவே எதற்கெடுத்தாலும் முன் பின் யோசிக்காமல் அலட்டிக் கொள்வதை விடுத்து ஒருவரையொருவர் மதித்து நடக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் இன – மதங்களை உட்படுத்தி அண்மைய வாரங்களாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் பஹாங் சுல்தானின் அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது.