
கோலாலாம்பூர், டிசம்பர் 23-டத்தோ ஸ்ரீ Dr சலிஹா முஸ்தஃபா முன்பு சுகாதார அமைச்சராக இருந்தபோது GEG புகையிலை சட்ட மசோதவைத் திரும்பப் பெற அவருக்கு 50 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வழங்க யாரோ முன்வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
சாலிஹாவின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜி. சிவமலர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
GEG என்பது மலேசியாவில் புகையிலை மற்றும் நிக்கோடின் தயாரிப்புகளைத் தலைமுறை தலைமுறையாகத் தடை செய்ய முன்மொழியப்பட்ட சட்டமாகும்.
அச்சட்ட மசோதாவை முன்னெடுத்துச் செல்லாமல் கிடப்பில் போடுவதற்காக சாலிஹாவுக்கு அவ்வளவுப் பெரிய லஞ்சத் தொகையை வழங்க யாரோ முன்வந்ததாகவும், ஆனால் அதனை அவர் திட்டவட்டமாக நிராகரித்ததாகவும் சிவமலர் கடந்த வாரம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார்.
எனினும், தனது அக்கூற்றின் உண்மை அர்த்தம் குறித்து விளக்கும் பொருட்டு MACC-யிடம் புகாரளித்துள்ளதாக அவர் இன்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவிய தகவல், உண்மையான லஞ்சம் அல்லது கோரிக்கை அல்ல; மாறாக தமது கூற்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.
யார் மீதும் பழிபோடுவதற்காக அக்கூற்று வெளியிடப்படவில்லை; மாறாக, அமைச்சராக இருந்த போது கொள்கைத் தவறாமல் Dr சாலிஹா எவ்வளவு நெறியோடு நடந்துகொண்டா என்பதை பாராட்டும் நோக்கத்தைக் கொண்டது.
இந்நிலையில், வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்யவும், மேலும் யூகங்களைத் தவிர்க்கவும் MACC-யிடம் புகாரளிக்கப்பட்டுள்ளதாக சிவமலர் சொன்னார்.



