
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-7, பினாங்கு, ஜாலான் பாயா தெருபோங்கில் 50 கிலோ கிராம் எடையிலான கற்பாறை மேலே விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற வங்காள தேச கட்டுமானத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
மலைச்சரிவிலிருந்து அப்பாறை உருண்டு வந்திருக்கலாமென நம்பப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மதியம் பாயான் லெப்பாசிலிருந்து ஃபார்லிம் செல்லும் வழியில் அவ்வாடவருக்கு அத்துயரம் ஏற்பட்டதாக, தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிடென்டண்ட் Lee Swee Sake கூறினார்.
கற்பாறை விழுந்த வேகத்தில் அந்நபர் சாலையில் விழுந்த வேளை, மோட்டார் சைக்கிளின் முன்பகுதி சேதமுற்றது.
இவ்வேளையில் அச்சம்பவம் குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளுமாறு, பினாங்கு மாநகர் மன்றத்துக்கும் பொதுப் பணித் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த கற்பாறை எப்படி விழுந்தது, அப்பகுதியில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரித்து அறிக்கைத் தருமாறும் பணிக்கப்பட்டுள்ளது.