
ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-21, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் வீடுகளில் சிவப்பு சாயம் வீசுவது, பெட்ரோல் குண்டுகளை எறிவது என ஆறு மாநிலங்களில் சதிநாச வேலைகளில் ஈடுபட்டு வந்த வட்டி முதலை கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
அக்கும்பலைச் சேர்ந்த நால்வர் கெடா மற்றும் பேராக்கில் கடந்த வியாழக் கிழமை கைதாகினர்.
பினாங்கு, கெடா, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா ஆகியவையே அந்த 6 மாநிலங்களாகும்.
அங்கு மொத்தமாக 27 சதிநாச வேலைகளில் அக்கும்பல் ஈடுபட்டுள்ளது.
இணையம் வாயிலாகவும் அக்கும்பல் சட்டவிரோதமாக கடன் வழங்கி வந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டதாக, பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் (Datuk Hamzah Ahmad) தெரிவித்தார்.
காசோலை புத்தகம், கடன் வாங்கியவர்களின் பட்டியல், கைப்பேசிகள், Honda City கார் உள்ளிட்டவையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
பல்வேறு இடங்களில் அவர்கள் சதிநாச வேலைகளில் ஈடுபட்ட 24 வீடியோக்கள், கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.