பெய்ஜிங், பிப்ரவரி-7 – சீனாவில் பதின்ம வயது பெண் பிள்ளை ஒருவர், மலேசிய ரிங்கிட்டுக்கு 622,000 ரிங்கிட் மதிப்பிலான தனது தாயின் நகைகளை அவருக்குத் தெரியாமலேயே விற்றுள்ளார்.
அது கூட தப்பில்லை என வைத்துக் கொள்வோம்; ஆனால் அதை வெறும் 36 ரிங்கிட்டுக்கு அவர் விற்றதை தான் ஜீரணிக்க முடியவில்லை.
அதுவும், உதட்டில் போடும் வளையம் மற்றும் காதில் போடும் தோடுகளை வாங்க லட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்பிலான நகைகளை அவர் விற்றுள்ளார்.
தனது பச்சை நிற காப்பு, சங்கிலி, விலை மதிப்புமிக்க இரத்தினக் கல் ஆகியவற்றை மகள் திருடி உள்ளூர் சந்தையில் விற்ற விஷயம் அண்மையில் தான் தாய்க்குத் தெரிய வந்தது.
பதின்ம வயதினருக்கே உரித்தான ‘வயதுக் கோளாறால்’ பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் அப்பெண், தாயின் நகைகள் போலியானவை என நினைத்து கடையில் விற்றுள்ளாராம்.
யாரோ ஒருவர் அணிந்திருந்த தோடு தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும், அதை வாங்கியே தீருவதென்ற முடிவில் நகைகளை விற்றதாகவும், தாய் விசாரித்த போது மகள் கூறியுள்ளார்.
இதையடுத்து தாய் போலீஸில் புகார் செய்ய, உடனடி விசாரணைத் தொடங்கியது.
சில மணி நேரங்களிலேயே, மகள் விற்ற நகைகள் அடையாளம் காணப்பட்டு, கடைக்காரரின் ஒத்துழைப்போடு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.