
புத்ராஜெயா, அக்டோபர்-22 – உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), 65,000 ரிங்கிட் பெறுமானமுள்ள கைப்பேசி போலி உதிரிப் பாகங்களை (phone accessories) பறிமுதல் செய்துள்ளது.
கடந்த வாரம் கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜோகூர், பேராக், பஹாங், கெடா, பினாங்கு ஆகிய 9 மாநிலங்களில் 14 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அப்பொருட்கள் சிக்கின.
வணிக முத்திரைக் காப்புரிமையை வைத்துள்ள நிறுவனங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, KPDN அமுலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் (Datuk Azman Adam) தெரிவித்தார்.
அசல் உதிரிப் பாகங்களை விற்கும் நிறுவனங்களின் பெயர்களின் பின்னால் ஒளிந்துக்கொண்டு, போலிப் பொருட்களை, சம்பந்தப்பட்ட 14 கடைகளும் விற்று வந்துள்ளன.
அத்தகைய 2,600 கைப்பேசி உதிரிப் பொட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
இதையடுத்து 2019 வணிக முத்திரைச் சட்டத்தின் கீழ் 13 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருப்பதாக டத்தோ அஸ்மான் கூறினார்.