
கோலாலாம்பூர், செப்டம்பர்-11 – ஏழே நாட்களில் 9 மலைகளேறி சாதனைப் படைத்த பேராக்கைச் சேர்ந்த இளைஞர் லோகசந்திரனுக்கு, இன்று மலேசிய சாதனை புத்தகத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஜோகூர் கூனோங் லேடாங் மலையில் தொடங்கிய இவரின் பயணம், தேசிய தினமான ஆகஸ்ட் 31-ஆம் தேதி பேராக் – கெடா எல்லையில் உள்ள கூனோங் கெருனை மலையில் வெற்றிகரமாக நிறைவுப் பெற்றது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அடைந்துள்ள இந்தச் சாதனை தன்னுடையது மட்டுமல்ல, தனது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் முதல் நாள் முதல் இன்று வரை தன் பின்னால் நின்ற அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது என லோகசந்திரன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இவரின் இந்த 7 நாள் பயணத்தை வணக்கம் மலேசியா உடனுக்குடன் விரிவான செய்தியாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், லோக சந்திரனின் இச்சாதனை மற்ற இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையுமென, மலேசிய சாதனை புத்தகத்தின் அதிகாரி மேனகா வடமலை கூறினார்.
கோவிட் காலத்தில் ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கிய மலையேறும் நடவடிக்கை இன்று மலேசியச் சாதனையாளராக இவரை உயர்த்தியுள்ளது.
விடாமுயற்சியும் மனம்தளராமையும் இருந்தால் ஒருவர் எந்த எல்லையையும் தொடலாம் என்பதற்கு இந்த இளைஞரே ஓர் எடுத்துக்காட்டு.