
தோக்யோ, டிசம்பர்-10 – ஜப்பானில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கத்திற்குப் பிறகு, அதை விட சக்தி வாய்ந்த ‘மெகா நிலநடுக்கம்’ ஏற்படும் அபாயம் உள்ளதாக, அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி நிறுவனம், உச்சக் கட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இது பேரழிவைக் கொண்டு வரலாம் என அஞ்சப்படுகிறது.
எனவே பசிஃபிக் கடற்கரை அருகில் வசிக்கும் மக்கள் அடுத்த ஒரு வாரம் முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையெனில் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த எச்சரிக்கை, தலைநகர் தோக்யோவுக்கு அருகேயுள்ள Chiba மாநிலத்திலிருந்து Hokkaido வரை சுமார் 1,300 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடகிழக்கு கடற்கரை முழுவதையும் உள்ளடக்கியுள்ளது.
வானிலை மையம் கூறுவதுபோல் ஒருவேளை கடலுக்குத் அருகே ஒரு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிகபட்சம் 30 மீட்டர் உயரத்திற்கு சுனாமி ஏற்படலாம்.
இதனால் சுமார் 200,000 உயிரிழப்புகள் ஏற்பட்டு, 220,000 வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடையலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் 198 பில்லியன் டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாம்.
முன்னதாக திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 34 பேர் காயமடைந்தனர்.
பல கடலோர பகுதிகளில் 70 சென்டி மீட்டர் வரை அலைகள் பதிவாக, சுனாமி எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.
எல்லா அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கைகளும் இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள அணு உலைகள் உடனடி பாதுகாப்பு பரிசோதனைகளை நடத்தியுள்ளன.
இந்த உயர்நிலை எச்சரிக்கையானது, 2022-ல் எச்சரிக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு விடுக்கப்பட்ட முதல் உச்சக் கட்ட எச்சரிக்கையாகும்.



