
சைபர்ஜெயா, டிசம்பர் 15-மலேசியாவில் 8 மில்லியன் பயனர்களுக்கும் மேல் கொண்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களும் வரும் ஜனவரி 1 முதல், புதிய உரிமக் கட்டமைப்பின் கீழ் இயல்பாகவே பதிவுச் செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC அதனை அறிவித்துள்ளது.
இந்தத் தானியங்கி பதிவின் மூலம், 8 மில்லியன் பயனர்களைக் கடந்த தளங்கள், (ASP(C)) உரிமம் பெற்றதாகக் கருதப்படும் என MCMC கூறியது.
WhatsApp, Telegram, Facebook, Instagram, TikTok, YouTube போன்ற முக்கிய சமூக ஊடகத் தளங்களும் இப்புதிய விதிமுறைக்கு கட்டுப்பட்டவையே.
பெரிய அளவிலான சேவை வழங்குநர்கள் மலேசிய சட்டத்திட்டங்களுக்கும் ஒழுங்குமுறைக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
குறிப்பாக பயனர் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, குடும்ப நலன் ஆகியவற்றில் உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்டு அவைப் பொறுப்பேற்க வேண்டும்.
இதன் மூலம், உள்ளடக்கக் கட்டுப்பாடு, தரவுகளைக் கையாளுதல், பாதுகாப்புக் கொள்கைகள் ஆகியவை உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்ப மாற்றப்படலாம்.
பயனர்களுக்கும், மேலதிகக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கிடைப்பதை இது உறுதிச் செய்யும்.
சுருக்கமாகச் சொன்னால், தொடர்புத் துறை டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் ஏற்கனவே கூறியபடி, மலேசியா தனது டிஜிட்டல் நிர்வாக முறையை வலுப்படுத்துகிறது.



