கோலாலம்பூர், செப்டம்பர் -7 – முழுமுதற் கடவுள், மூலாதார மூர்த்தி, எளிமையின் நாயகன், சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லாருக்கும் பிடித்த விநாயகன்…..
ஆம், ஆனைமுகனின் சிறப்புக்குரிய நாட்களில் அதிமுக்கிய நாளான விநாயகர் சதுர்த்தி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆவணி சதுர்த்தியான இன்று தான் விநாயகர் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த சதுர்த்தி தினத்தையே பிள்ளையார் பிறந்த தினமாக நாம் போற்றி வருகின்றோம்.
மலேசியாவில் விநாயகர் சன்னிதிகளிலும் மற்ற ஆலயங்களிலும் சதுர்த்தி களைக்கட்டியுள்ளது.
அதுவும் இம்முறை வாரக்கடைசியில் வந்திருப்பதால் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
குறிப்பாக கோலாலம்பூர் கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில், பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ சக்தி கற்பக விநாயகர் கோயில்களில் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலையே சிறப்பு பூஜைகள் தொடங்கி, இரவில் விநாயகர் பெருமான் தங்க இரத ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கணேசர் புகழ் பாடி இரத ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இவ்வேளையில் செந்தூல் ஸ்ரீ ஆதீஸ்வரன் கோயிலில் இன்று காலை விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
மஞ்சள், திருநீறு, பால், தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டதை திரளாக வந்திருந்த பக்கதர்கள் பரவசம் அடைந்தனர்.
சிறப்பு பூஜைகள், கணநாதனுக்கு அபிஷேக ஆராதனைகள், பஜனைகள், அன்னதானம் என நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி அனுசரிக்கப்பட்டு வருகிறது.