பாங்கி, செப்டம்பர் 8 – நாட்டில் கடந்த ஓராண்டில் 1,869 போலீஸ்காரர்கள் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 175 பேர் கடுமையான குற்றங்களுக்காக போலீஸ் வேலையிலிருந்தே நீக்கப்பட்டனர்.
பணம் கேட்டு மிரட்டியது, போதைப்பொருள், கிரிமினல் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் வேலையிழந்தனர்.
அரச மலேசியப் போலீஸ் படையில் தவறான நடத்தையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என, தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை (Datuk Seri Ayob Khan Mydin Pitchay) தெரிவித்தார்.
நடப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கட்டொழுங்கு நடவடிக்கைகள், குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு விரிவான தீர்வு காண்பதில் முக்கியப் பகுதியாகும் என்றார் அவர்.
தவறான நடத்தைக்கு தீர்வு காண PDRM எடுத்த நடவடிக்கைகளில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி, ஒருமைப்பாடு சோதனை மற்றும் ஒழுக்கம் – போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் கடுமையான அமலாக்கம் ஆகியவையும் அடங்கும்.
தங்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள போலீஸ்காரர்களை முறையாகக் கண்காணிக்காத 50 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆயோப் கான் சொன்னார்.