ஈப்போ, செப்டம்பர்-10, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் (JAKIM) ஹலால் முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில், பேராக், கமுந்திங், Taman Glenview-வில் உள்ள ஸ்ரீ காயா தொழிற்சாலையில் நேற்றிரவு அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) தைப்பிங் கிளை மேற்கொண்ட சோதனையில், ஸ்ரீ காயா (jem) பொட்டலங்களில் ஹலால் முத்திரை இருந்தது கண்டறியப்பட்டது.
பேராக் மற்றும் பினாங்கில் விநியோகம் செய்யப்படுவதற்காக அந்த ஸ்ரீ காயா ஜாம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.
ஆனால், மலேசிய ஹலால் அனுமதி சான்றிதழைக் கேட்ட போது, தொழிற்சாலை உரிமையாளரால் அதனைக் காட்ட முடியவில்லை.
இதையடுத்து, 2011 வர்த்தகக் குறிப்பு ஆணையின் கீழ் RM452.25 மதிப்புள்ள ஸ்ரீ காயா உணவுப் பொருட்கள் அடங்கிய பொருட்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஸ்ரீ காயா ஜாம் அடைக்கப்பட்டிருந்த 65 டப்பாக்கள், ஹலால் முத்திரைப் பதிக்கப்பட்ட 2,000 பிளாஸ்டிக் டப்பாக்களும் அவற்றில் அடங்கும்.
1994-ஆம் ஆண்டு முதல் அத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது; ஆனால் அதன் ஹலால் முத்திரை அனுமதி காலாவதியாகி, விசாரனையில் இருப்பது கண்டறியப்பட்டது.
ஹலால் முத்திரை விவகாரத்தில் சட்டத்தை மீறுவோருக்கு அபராதங்களும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என KPDN அனைத்துத் தரப்பினரையும் எச்சரித்துள்ளது.