புத்ராஜெயா, செப்டம்பர்-18 – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் இரு மூத்த புதல்வர்களும் ஒரு வழியாக தங்களின் சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பாணையத்திடம் (MACC) அறிவித்துள்ளனர்.
தாங்கள் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் மிர்சானும் (Mirzan) மொக்சானியும் (Mokhzani) அவற்றை சமர்ப்பித்ததாக, MACC தலைமை ஆணையர் Tan Sri Azam Baki சொன்னார்.
எனினும், சில விஷயங்கள் தொடர்பாக, அவ்விருவரின் வழக்கறிஞர்களுடன் தமது தரப்பு தொடர்ந்து பேசி வருவதாக Azam Baki கூறினார்.
2009 MACC சட்டத்தின் கீழ், கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை அறிவிக்குமாறு, அவ்விருவருக்கும் கடந்தாண்டு இறுதியில் MACC நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தங்களது தந்தை பிரதமர் ஆன 1981-ஆம் ஆண்டில் இருந்து அக்கணக்குகளைக் காட்ட வேண்டியிருப்பதால், அவ்விருவரும் கேட்டுக் கொண்டது போல MACC அவர்களுக்குக் கூடுதல் கால அவகாசமும் கொடுத்திருந்தது.
40 ஆண்டுகளுக்கு முன்பு சேர்த்த சொத்துக்களுக்கு இப்போது மொத்தமாகக் கணக்குக் கேட்டால் எங்கே போவது என MACC-யின் உத்தரவுக்கு எதிராக மகாதீர் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.