ஜோகூர் பாரு, செப்டம்பர்-20, ஜோகூரில் நடமாடியதாக கூறி இரு வேறு வீடியோக்களில் வைரலான புலிகள் உண்மையில் ஒரே புலியாக இருக்கக் கூடும்.
வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னின் ஜோகூர் கிளை அவ்வாறு கூறியுள்ளது.
அதே புலி கேமராவில் பதிவானது இது முறையல்ல; ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் Jalan Jemaluang-கில் அதன் நடமாட்டம் காணப்பட்டதாக, ஜோகூர் PERHLITAN இயக்குநர் Aminuddin Jamin தெரிவித்தார்.
என்ற போதிலும், அப்பகுதி வாழ் மக்கள் மற்றும் பிராணிகளின் பாதுகாப்புக் கருதி, PERHILITAN குழுவொன்று Mersing அனுப்பப்பட்டுள்ளது.
வைரலான இரண்டாவது வீடியோவில் பூர்வக்குடி கிராமத்திற்கு அருகே புலி நடமாடியது போல், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புலி நுழைந்து விடாதிருப்பதை அக்குழு உறுதிச் செய்யும் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட பூர்வக்குடி கிராம மக்களுக்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 12-ஆம் தேதி மெர்சிங் ஃபெல்டா காட்டுப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இரு நண்பர்கள் புலியை நேருக்கு நேர் சந்தித்து பயங்கர அனுபவத்தை எதிர்கொண்டனர்.
பின்னர் செப்டம்பர் 15-ஆம் தேதி பட்டப் பகலில் Jalan Jemaluang சாலையை புலி கடப்பதை வாகனமோட்டி ஒருவர் கேமராவில் பதிவுச் செய்து, அவ்வீடியோவும் வைரலானது.