புத்ராஜெயா, செப்டம்பர் -25 – ஈமச்சடங்கு காரியங்களுக்காக கெடா, ஜோகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களில் இந்து மின்சுடலைகளை நிர்மாணிப்பதற்காக, அரசாங்கம் 2 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
அதிகமான இந்திய மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் என்ற அடிப்படையில் அவற்றுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவ்வகையில் ஜோகூரில் 2 மின்சுடலைகளும், மற்ற 4 மாநிலங்களில் தலா ஒரு மின்சுடலையும் நிர்மாணிக்கப்படும்.
நேற்று புத்ராஜெயாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் அவ்வாறு சொன்னார்.
இந்தியச் சமூகத்தின் நலன்கள் ஒற்றுமை அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சிறிய சான்று.
அதோடு கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து முக்கிய அம்சங்களும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
இவ்வேளையில், அக்டோபர் 18-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள 2025 வரவு செலவு அறிக்கையில்,
இந்தியச் சமூகத்தின் நலனை உறுதி செய்யும் வகையில், முந்தைய வரவுசெலவுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில திட்டங்கள் தொடரப்படவுள்ளன.
மித்ராவுக்கான நிதி ஒதுக்கீடு, தொழில்முனைவோர்களுக்கான TEKUN பொருளாதார நிதி, அமானா இக்தியார் மலேசியா வாயிலாக ஒதுக்கப்பட்ட நிதியும் அவற்றில் அடங்கும் என டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.