ஹெல்சிங்கி, செப்டம்பர் -26 – மேற்கு ஐரோப்பிய நாடான ஃபின்லாந்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலை, இரண்டு ராட்சத பாண்டா கரடிகளை முன்கூட்டியே சீனாவுக்குத் திருப்பி அனுப்புகிறது.
செலவின உயர்வால் இனியும் அவற்றைப் பராமரிக்க முடியாது என மிருகக்காட்சி சாலை முடிவுக்கு வந்துள்ளது.
விலங்குகளைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்ட பிறகு, 2018-இல் Lumi, Pyry ஆகிய 2 பாண்டாக்களும் ஃபின்லாந்து கொண்டு வரப்பட்டன.
அங்கு 15 ஆண்டுகள் அவை தங்கியிருக்க வேண்டும் என்பதே ஒப்பந்தமாகும்.
ஆனால் பாண்டாக்களின் பராமரிப்பிற்காக ஒரு வருடத்திற்கு 1.5m யூரோ அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு 6.9 மில்லியனும், அவற்றை அடைத்து வைப்பதற்கு மட்டுமே 8m யூரோ அல்லது 36 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவாகியுள்ளது.
இனியும் அச்சுமையைத் தாங்க முடியாது என்பதற்கு, பணவீக்கம் மற்றும் கோவிட் பெருந்தொற்று தாக்கத்தால் ஏற்பட்ட கடன்களை மிருகக்காட்சி சாலை காரணம் காட்டுகிறது.
இது ஒரு தொழில் சார்ந்த முடிவு, அரசாங்கங்கள் சம்பந்தப்படவில்லை; எனவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என ஃபின்லாந்து வெளியுறவுத்துறை பேச்சாளர் சொன்னார்.
Lumi-யும் Pyry-யும் ஒரு மாத காலம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, நவம்பரில் சீனா திரும்புகின்றன.
தூதரக – வர்த்தக உறவை மேம்படுத்துவதோடு, தன் மீதான வெளிநாடுகளின் கண்ணோட்டதை உயர்த்தும் நோக்கில், வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளுக்கு பாண்டா கரடிகளை அனுப்புவதை சீனா பழக்கமாக வைத்துள்ளது.