புத்ராஜெயா, செப்டம்பர்-26 – வானிலை முன்னறிவிப்பு தொடர்பான தகவல் பரிமாற்ற SOP நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
தகவல் பரிமாற்றத்திற்கான தொடர்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட வேண்டும்.
இயற்கைவள, சுற்றுச்சூழல். பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் (Nik Nazmi Nik Ahmad), மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia-வை அவ்வாறு பணித்துள்ளார்.
வானிலை மோசமாவதற்கு முன்பே, அவ்விவரங்கள் அடிக்கடி பகிரப்படுவது அவசியமாகும்.
அப்போது தான், நடப்பு வானிலை நிலவரங்களையும் மாற்றங்களையும் பொது மக்கள் எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும்.
இதன் முலம் அசம்பாவிதங்களையும் தவிர்க்க முடியுமென்றார் அவர்.
5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் இன்னமும் பயன்படுத்தப்படக் கூடியதே என்பதால் தான், அடிக்கடியோ அல்லது அன்றாடமோ வானிலை எச்சரிக்கைகளை MET Malaysia விடுப்பதில்லை என செய்திகள் வெளியானதை அடுத்து அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில், இந்த பருவநிலை மாற்றம் இவ்வாரம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என்பதால், இந்த மழைக்காலத்தில் பொது மக்களும் முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.
திடீர் வெள்ளம், மரங்கள் சாய்வது, வலுவற்ற கட்டமைப்புகளில் சேதங்கள் ஏற்படுவது போன்ற அபாயங்களை எதிர்கொள்ள அவர்கள் தயாரக இருக்க வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.