குழுவாங், செப்டம்பர் -28, இரு வார கால பிரச்சாரங்கள் ஓய்ந்து, ஜோகூர், குழுவாங் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு இதுவரை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
தேசிய முன்னணியின் கோட்டையான அத்தொகுதியில், அதன் வேட்பாளருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளருக்கும் இடையில் நேரடி போட்டி நிலவுகிறது.
தேசிய முன்னணி வசதியான பெரும்பான்மையோடு தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளுமென பரவலாகக் கூறப்பட்டாலும், பிரச்சார காலத்தில் வாக்காளர்கள் மத்தியில் மனவோட்டம் மாறியிருக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.
பெரும்பான்மையினரான மலாய்க்காரர்களின் வாக்குகள் பிரியும் சாத்தியமிருப்பதால், சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் இம்முறை முக்கியத்துவம் பெறுகின்றனர்.
சீனர்கள் DAP-யின் பக்கமே வலுவாக நின்றாலும், அக்கட்சி தற்போது ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதி என்பதால் வாக்குகள் சிதற வாய்ப்பில்லை.
என்றாலும், மாநில ஆட்சியில் பெரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்தாத இவ்விடைத் தேர்தலில் அவர்கள் திரண்டு வந்து வாக்களிப்பார்களா என்பது கேள்விக் குறியே.
குறிப்பாக சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் வாக்களிக்க வருவார்களா என்பது நிச்சயமல்ல.
அதே சமயம் 5,000 -க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் எந்த பக்கம் திரும்புவார்கள் என்பதைப் பொறுத்தும் வெற்றி அமையலாம்.
குளுவாங் தொகுதி வாழ் இந்தியர்களுக்கு மாநில மந்திரி பெசாரின் நேரடி பார்வையில் பல்வேறு உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய வாக்குகளை கவரும் முயற்சியில் ம.இ.கா தேசியத் தலைவர் தலைமையில் தீவிர பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவை அனைத்தும் இன்று வாக்குகளாக மாறுவது உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
பிரச்சாரங்களின் கடைசியில் பெரிக்காத்தான் கையாண்ட சில விஷயங்களையும் புறந்தள்ளி விட முடியாது.
ஆக தேசிய முன்னணி அமோக வெற்றிப் பெறுமா, அல்லது அதன் வாக்குகள் சரியுமா அல்லது பெரிக்காத்தான் வெற்றிப் பெற்றிப் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்றிரவு 9 மணிக்கு மேல் இடைத்தேர்தல் முடிவு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.