காஜாங், அக்டோபர்-4, மோட்டார் சைக்கிள்களுக்கான B1, B2 உரிமங்களை முழுமையான B உரிமத்திற்கு மாற்றும் சிறப்புத் திட்டத்தில் பங்கேற்கும் முன்னர், அபராத பாக்கி அனைத்தையும் செலுத்தி விடுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நிலுவையில் உள்ள அபராதங்கள் JPJ மற்றும் போலீஸ் வெளியிட்ட சம்மன்களை உள்ளடக்கியிருக்கும்.
B பிரிவு உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் முன்னர் கறுப்புப் பட்டியலில் பெயரில்லாமலிருப்பதை உறுதிச் செய்துகொள்ளுமாறு, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி (Datuk Aedly Fadly Ramli) தெரிவித்தார்.
B பிரிவு முழு உரிமத்தைப் பெறுவதற்கான நிபந்தனைகளில் பல தளர்வுகள் வழங்கப்பட்டாலும், அபராத பாக்கி இருக்கக் கூடாது என்ற குறிப்பிட்ட சில விதிமுறைகளை அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டுமென, டத்தோ ஏடி சொன்னார்.
B பிரிவு உரிமத்துக்கான விண்ணப்பத் தகுதியை பொது மக்கள், MyJPJ செயலி, JPJ அலுவலக சேவை முகப்புகள், JPJ இணைய அகப்பக்கங்களில் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
B1 அல்லது B2 உரிமங்களுக்கான நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்திருந்தும், நீங்கள் தகுதியற்றவர் என காட்டினால், அபராத பாக்கியை JPJ-விடமோ அல்லது போலீசிடமோ சரிபார்க்க வேண்டும்.
அபராத பாக்கி முழுமையாகச் செலுத்தப்பட்டால் மட்டுமே, தகுதியற்றவரிலிருந்து தகுதியானவருக்கு நிலை மாறும் என்றார் அவர்.
அக்டோபர் ஒன்றாம் தேதி அமுலுக்கு வந்த அச்சிறப்பு மாற்றுத் திட்டத்தில் பங்கெடுக்க, நாட்டில் B1 மற்றும் B2 உரிமங்களை வைத்திருக்கும் 93 லட்சத்து 10 ஆயிரம் பேரில், 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் தகுதிப் பெற்றிருக்கின்றனர்.