பத்து பஹாட், அக்டோபர்-7 – மனைவியின் சமூக ஊடகப் பதிவால் சினங்கொண்டு, 6 வார கர்ப்பிணி என்றும் பாராமல் அவரைத் தாக்கியதாக, தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர் இன்று ஜோகூர் பத்து பஹாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், ஏழாண்டுகளுக்கு முன்னர் மனநல சிகிச்சைப் பெற்றவரான 40 வயது Mohd Hasri Turaman, தம் மீதான அக்குற்றச்சாட்டை மறுத்தார்.
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அந்நபர், கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி தாமான் சோகாவில் உள்ள வீட்டில் வைத்து அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
சம்பவத்திற்கு முன்பாக, ஸ்கூடாயில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் செல்வதற்காக 34 வயது அப்பெண் கணவனிடம் 20 ரிங்கிட்டை கேட்டுள்ளார்.
அதனை சற்றும் பொருட்படுத்தாத கணவன், 20-கும் மேற்பட்ட தடவை மனைவி கைப்பேசிக்கு அழைத்தும், அதை அலட்சியப்படுத்தினார்.
இதனால் விரக்தியடைந்த மனைவி, தனது கோபத்தை சமூக ஊடகத்தில் கொட்ட, அது கணவனின் கண்களில் பட, கடைசியில் அடிதடியில் முடிந்தது.
வீட்டுக்கு வந்த கையோடு கணவனால் சரமாரியாகத் தாக்கப்பட்டதில், மனைவி சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
மூவாயிரம் ரிங்கிட் தொகையில் அந்நபரை ஜாமீனில் விடுவித்த மேஜிஸ்திரேட் நீதிமன்றம், நவம்பர் 13-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவித்தது.