Latestஉலகம்

டெலிகிராம் துணையுடன் தென்கிழக்காசியாவில் ‘கொடி கட்டி பறக்கும்’ குற்றச்செயல் கும்பல்கள்

பேங்கோக், அக்டோபர்-8 – பிரபல சமூக ஊடகமான டெலிகிராம் துணையுடன் தென்கிழக்காசியாவின் குற்றச்செயல் கட்டமைப்புகள், திட்டமிட்ட குற்றச்செயல்களை பெரிய அளவில் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை அம்பலப்படுத்தியுள்ளது.

குறைந்தபட்ச கட்டுப்பாட்டை கொண்டுள்ள சமூக ஊடகமாக டெலிகிராம் திகழ்வது அதற்கு மிகவும் வசதியாகப் போய்விட்டதாக, போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கான ஐநா அலுவலகம் (UNODC) தனதறிக்கையில் கூறியது.

கடன் பற்று அட்டை விவரங்கள், கடவுச்சொல், browsing history எனப்படும் இணையப் பக்க உலாவல் வரலாறு உள்ளிட்டவை திருடப்பட்டு டெலிகிராமில் வெளிப்படையாகவே விற்கப்படுகின்றன.

ஆளையே மாற்றும் deepfake மற்றும் கணினிகள் அல்லது கைப்பேசிகளை ஊடுருவி தகவல்களைத் திருடக் கூடிய hack செயலிகளின் விற்பனையும் டெலிகிராமில் ஜோராக நடைபெறுகிறது.

தவிர, உரிமம் பெறாத கிரிப்தோ நாணய மாற்ற நடவடிக்கை வாயிலாக, கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், கள்ளத் தரவுச் சந்தையே டெலிகிராமுக்கு மாறி வந்து விட்டது.

பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்த கும்பல்களே இதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

மனித கடத்தல் வாயிலாக ஆட்களை வேலைக்கமர்த்தி உலகம் முழுவதுமுள்ள மக்களைக் குறி வைத்து ஆண்டுக்கு 117.35 பில்லியன் முதல் 156.32 பில்லியன் ரிங்கிட் வரை அவை வருமானத்தை அள்ளுகின்றன.

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கடந்த ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டில் கைதான நிலையில், ஐநாவின் அவ்வறிக்கை வெளியாகியுள்ளது.

டெலிகிராமில் பரவலாக நடைபெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி பதிவான வழக்கில், 39 வயது துரோவ் கைதுச் செய்யப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!