புத்ராஜெயா, அக்டோபர் 8 – 14 ஆண்டுகளுக்கு முன்னர், அழகுசாதன நிறுவன உரிமையாளர் கோடீஸ்வர் டத்தோ சொசிலாவாத்தி லாவியா (Datuk Sosilawati Lawiya) மற்றும் அவரின் மூன்று உதவியாளர்களை கொலை செய்ததற்காக, குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை, கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
முன்னாள் வழக்கறிஞர் 55 வயதான என். பத்மநாபன் மற்றும் அவரின் தோட்டத் தொழிலாளியான 33 வயதான தி.தில்லையழகன் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மனுவை, இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நிராகரித்தது.
அதனைத் தொடர்ந்து இருவருக்கும், விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை அது நிலைநிறுத்தியது.
இதனிடையே, இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு நபரான 44 வயது ஆர். காத்தவராயன், தாம் செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை இறுதி நேரத்தில் மீட்டுக்கொண்டார்.
ஆகையால், அவரின் மரணத் தண்டனையும் நிலைநிறுத்தப்பட்டது.
அழகுசாதன நிறுவன உரிமையாளர் கோடீஸ்வர் சொசிலாவாத்தி லாவியா, அவரின் கார் ஓட்டுநர், வங்கி அதிகாரி உட்பட வழக்கறிஞர் என நால்வரையும் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி, இம்மூவரும் கொலை செய்ததற்காக 2013ஆம் ஆண்டு மே மாதம், ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் மரணத் தண்டனையை விதிக்கப்பட்டது.