
கோலாலம்பூர், அக்டோபர்-11- சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள பிரபல பேரங்காடியில் பாதுகாப்பை மீறி மீன் பிடித்த ஆடவர் வைரலாகியுள்ளார்.
உணவகமொன்றின் முன்னே மீன் தூண்டிலுடன் அவர் பாட்டுக்கு மீன் பிடிக்கும் வீடியோ வலைத்தளவாசிகளின் கவனத்தைப் பெற்று வருகிறது.
பேரங்காடியின் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைத் தடுத்த நிறுத்தி வெளியேற்ற முயன்ற போதும் அந்நபர் அசரவேயில்லை.
ஏதோ ஆற்றில் மீன் பிடிப்பது போல் அத்தனை ஆர்வமாக அவர் அதில் மூழ்கியிருந்தார்.
அருகிலிருந்த சிலர் சிரித்துக் கொண்டே நடந்தவற்றை ‘கண்டு களிக்க’, அவர்களில் சிலர் எடுத்த புகைப்படங்களுக்கு அவ்வாடவர் கை விரல்களைக் காட்டி வெற்றி சைகை புரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
@hanazazkhan என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட அவ்வீடியோ, இதுவரை 300,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.
வலைத்தளவாசி ஒருவர், மனைவிமார்கள் மணிக்கணக்கில் shopping செய்யும் நேரத்தில் கணவன்மார்களுக்கு இது போன்ற மீன்பிடி பொழுதுபோக்குகளை பேரங்காடிகள் ஏற்படுத்தித் தரலாமே என நகைச்சுவையாக பரிந்துரை செய்தார்.