Latestமலேசியா

ஜோகூரில் உணவு விழாவில் அதிரடி சோதனை; 35 அந்நிய பிரஜைகள் கைது

ஜோகூர் பாரு, அக் 15 – ஜோகூர் பாரு, Padang Angsana Mall-லில் சனிக்கிழமை நடைபெற்ற உணவு கேளிக்கை விழாவின்போது ஜோகூர் குடிநுழைவுத்துறையின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 35 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அந்த விழாவில் அமைக்கப்பட்ட 52 அங்காடி உணவுக் கடைகளில் இரவு 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறையின் இயக்குனர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் (Mohd Rusdi Mohd Darus ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பெர்மிட் இன்றி இருந்ததோடு , அவர்கள் தங்களது சமூக வருகை பாஸ்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார் பெற்றதைத் தொடர்ந்து அங்கு சோதனை நடத்தப்பட்டது. அந்த நடவடிக்கையின்போது 102 வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சிலர் அங்கிருந்து தப்பியோடியபோதிலும் அவர்கள் குடிநுழைவு அதிகாரிகளால் பின்னர் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த 20 ஆடவர்கள், 8 பெண்கள் மற்றும் 19 முதல் 55 வயதுடைய இந்தோனேசியாவைச் சேர்ந்த எட்டு ஆடவர்களுடன் ஒரு பெண்ணும் அடங்குவர் என முகமட் ருஸ்டி தெரிவித்தார். அவர்கள் அனைவரும் குடிநுழைவுச் சட்டங்களின் பல்வேறு விதிமுறைகளை மீறியுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது தங்களது அங்காடிக் கடைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தது தொடர்பில் சில தனிப்பட்ட நபர்களுக்கு ஐந்து நோட்டிஸ்கள் வழங்கப்பட்டதோடு விசாரணைக்காக அவர்கள் குடிநுழைவுத்துறைக்கு வரும்படிகேட்டுக்கொள்ளப்பட்டதாக முகமட் ருஸ்டி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!