கோலாலம்பூர், அக் 15 – சிலாங்கூர் , கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் ( Bandar Bukit Tinggi) கடத்தப்பட்ட 12 வயது சிறுமியை கடத்தல்காரர்கள் நான்கு நாட்களாக பட்டினியாக வைத்திருந்த தகவல் வெளியாகியுள்ளன.
உணவு வாங்கச் சென்றபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட அந்த சிறுமி கடத்திவைக்கப்பட்டிருந்தபோது அவர் அறையப்பட்டதோடு கடத்தல்காரர்களால் பயங்கர சித்ரவதைக்கும் உள்ளாகியுள்ளார். எனினும் அடையாளம் தெரியாத தனிப்பட்ட ஒருவரின் உதவியினால் அச்சிறுமி வாடகைக் கார் மூலம் வெற்றிகரமாக தப்பியுள்ளார்.
அந்த சிறுமிக்கு கிள்ளான் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டதோடு அவர் கடத்தி வைக்கப்பட்டிருந்த இடம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. கிள்ளானில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் செவ்வாய்க்கிழமையன்று உணவு எடுக்கச் சென்றபோது காணாமல்போனதாக புகார் செய்யப்பட்ட அந்த சிறுமி பாதுகாப்புடன் கண்டுப்பிடிக்கப்பட்டார். சனிக்கிழமையன்று மாலை மணி 5.30அளவில் கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த சிறுமி கடத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு 13 மற்றும் 23 வயதுடைய இரு பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சா ஹோங் போங் ( Chah Hoong Fong) தெரிவித்தார். அந்த சிறுமி நடந்து சென்று கறுப்பு நிற புரோடுவா மைவி காருக்குள் நுழையும் காட்சி அருகேயுள்ள இடத்திலுள்ள சி.சி.டி.வி ரகசிய கேமராவில் பதிவாகியிருந்தது. தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது சிகாம்புட் டாலாம் , செத்தியா அலாம், மற்றும் பண்டமாரானில் பல்வேறு இடங்களில் சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்தனர்.